மாடித்தோட்டம் அமைப்பதைத் தன்னுடைய பகுதிநேரத் தொழிலாக செய்துவருகிறார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நவபட்டி என்ற ஊரைச் சேர்ந்த திரு. கமலக்கண்ணன் அவர்கள். அவரிடம் மாடித் தோட்டம் பற்றி கேட்டறிந்தோம் அதிலிருந்து…
எனக்கு சிறுவயதிலேயே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன் ஈரோட்டுக்கு அருகில் உள்ள சக்தி இன்ஸ்டிட் ஆப் டெக்னாலஜியில் விவசாயத்துறையில் பொறியியல் பட்டம் முடித்தேன். ஆரம்பத்தில் அந்தத் துறை சார்ந்த பணிக்குச் செல்ல வேண்டும் என முயன்றேன். ஆனால், அது மூன்று வருடம் கழித்து தான் நிறைவேறியது. 2009 ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையில் மண் பரிசோதகராக என்னுடைய ஆய்வுப் பணியை தொடங்கினேன். நான்கு வருடங்கள் இந்த ஆய்வுப் பணியில் இருந்தேன். அந்த நேரத்தில் ஒவ்வொரு இடத்திற்கேற்ப மண்ணின் உடையத் தரம், அதில் நிலத்திற்கு ஏற்ப எதை விதைத்தால் அதிக மகசூல் பெறமுடியும் என்பது போன்ற ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினேன். அதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து விவசாயத்திற்கான அத்மா செயல்திட்டம் என்ற அமைப்பில் தற்போது தொழில்நுட்ப துணை மேலாளராக பணி புரிந்து வருகிறேன்.
கூட்டுறவுத் துறையில் மண் பரிசோதகராக இருந்தபோது பல்வேறு விதமான மண் வகைகளை ஆய்வு செய்திருக்கிறேன். அப்போது நாட்டுவிதைகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்தால் மக்கள் அனைவருக்கும் தூய்மையான காய்கறிகள் கிடைக்கும் என நினைத்தேன். அதற்காக என்னால் முடிந்த அளவிற்கு என்னிடம் மண் பரிசோதனைக்காக வரும் விவசாயிகளிடம் நாட்டுவிதைகளை விதைக்கும் படி கேட்டுக்கொண்டு அவர்களுக்கு விதைகளையும் இலவசமாக வழங்கினேன். ஆனால், இலவசமாக கொடுக்கும் பொருட்களுக்கு மதிப்பில்லை என்பதை விரைவிலேயே உணர்ந்து கொண்டேன்.
நாட்டுவிதைகளை கட்டணம் வாங்கிக் கொண்டு கொடுக்க தொடங்கியபோது அதற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் உருவானதுதான் மாடித்தோட்டம் உருவாக்கும் தொழில் சிந்தனை. நாட்டுவிதைகளினுடைய பயன் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என நினைத்தேன். அதற்கு எளிமையான ஒரே வழி மாடித்தோட்டம் வளர்ப்பு தான். 7 ஆண்டுகளுக்கு முன்பாக முதலில் என்னுடைய வீட்டிலேயே மாடித்தோட்டத்தை வளர்த்தேன். நேரம் கிடைக்கும்போது மாடித்தோட்டம் அமைத்துக் கொடுப்பதை பகுதிநேர தொழிலாக கமல் மாடித்தோட்டம் (Kamal Terrace Garden )என்ற எனது நிறுவனத்தின் வழியாக செய்து வருகிறேன்.
நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் மண் இல்லா விவசாயம் மூலம் நம் வீட்டின் மொட்டை மாடி, பால்கனி போன்ற இடங்களில் இயற்கை முறையில் காய்கறி, மூலிகை மற்றும் தேவையான அனைத்து நாற்று விட்டு நடும் மற்றும் நேரிடையாக விதைக்கும் செடிகளும் எங்கள் நிறுவனத்தின் வழியாக அமைத்துதந்து, அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு தேவையான அனைத்து விதைகள், விதைப்பு பைகள், மண்புழு உரங்கள், இயற்கை உரங்கள் , தேங்காய் நார் கழிவு, பஞ்ச காவ்யம் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்களே உங்களுக்கு கொண்டுவந்து மாடித்தோட்டத்தை அமைத்து தந்துவிடுவோம்.
தக்காளி, வெண்டை, பீன்ஸ், கேரட் , பீட்ரூட் ,கோஸ், காளிபிளவர் , சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை கத்தரி, ஊதா கத்தரி, முள் கத்தரி, வெள்ளை கத்தரி, மனப்பாறை கத்தரி, உஜாலா கத்தரி, மிளகாய், குடை மிளகாய், கொத்தவரை, செடி அவரை, பட்டை அவரை, கொடி அவரை, கோழி அவரை, தமட்டை குண்டு சுரை , நீட்ட சுரை, குட்டை புடலை , நீட்ட புடலை , பீர்க்கன் , பாகல் மிதி பாகல் , பூசணி , பரங்கி , தர்பூசணி , செடி காராமணி , கொடி காராமணி , பப்பாளி , வெள்ளரி , வெள்ளை முள்ளங்கி , சிகப்பு முள்ளங்கி , அகத்திகீரை, அரைக்கீரை, சிறு கீரை, சிறிய தண்டு கீரை, பச்சை தண்டு கீரை, பருப்பு கீரை, பச்சை புளிச்சைக் கீரை, சிகப்பு புளிச்சைக் கீரை, பாலக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கை கீரை, வெந்தய கீரை, கொத்தமல்லி கீரை, காசினிகீரை, முளைகீரை, பூனைக்காளி போன்ற செடிகளின் நாட்டுவிதைகளையும் விற்பனை செய்து வருகிறேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
நம் வீட்டில் உள்ள மாடியில் சிறிய இடம் இருந்தாலே நாம் சில செடிகளை வளர்த்து பராமரிக்க முடியும். தினமும் காலை நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் விட்டு அது வளர ஆரம்பிப்பதை தினமும் பார்க்கும் பொழுதும் நம்முடைய மனம் புதிதாக ஒன்றை சாதித்ததை போன்ற மகிழ்ச்சியடையும். பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள், முதியோர்கள்களுக்கு உளவியல் ரீதியாக மாடித்தோட்டம் ஒரு ஆறுதல் அளிக்கும் இடமாக உள்ளது. தோட்டத்தை பராமரிப்பதால் மனஅழுத்தம் குறையும்.
என்னுடைய வாடிக்கையாளர்கள்தான் எங்கள் நிறுவனத்தின் விற்பனைப் தொடர்பு பிரதிநிதிகள் அவர்களின் வழியாகத்தான் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவருடைய வீடுகளுக்கும் மாடித்தோட்டம் அமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் மாடித்தோட்டம் அமைத்து கொடுத்துவிட்டு வருவதோடு மட்டுமில்லாமல் அந்த செடிகளுக்கு அவர்கள் எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருப்போம். எங்களுடைய வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் அவர்களுக்கான சந்தேகத்தை விரைவாக தீர்த்து வைத்துவிடுவோம்.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அவர்கள் கேட்கும் செடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்க ஆர்கானிக் கலவையை அவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவோம். அந்த வாரத்தின் விடுமுறை நாட்களில் நேரிடையாக சென்று வீட்டுத் தோட்டத்தை அமைத்து கொடுத்துவிடுவோம். குறைந்த பட்சமாக 25 செடிகளை கொண்டு மாடித்தோட்டம் அமைக்க ஒரு மணிநேரம் ஆகும். விதை விதைத்த சில நாட்களில் செடி முளைக்க ஆரம்பித்து விடும் அதை பிரித்து ஆர்கானிக் பைகளில் போட வேண்டும். செடி வளர்ந்த 35வது நாளில் இலை கிள்ளிவிடுவோம். அப்போது தான் நமக்கு கிளைகள் அதிகமாக தோன்றும். 60 வது நாள் நாம் காய் பறிக்கலாம். கீரை வளர்வதற்கு அதிகபட்சமாக 30 நாட்கள் போதுமானது.
சென்னை, சேலம், தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், ஈரோடு,பெங்களூர், பாண்டிச்சேரி போன்ற ஊர்களில் இதுவரை எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்து கொடுத்துள்ளோம்.
இந்தத் தொழிலில் அதிகமாக பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் போதுமான அளவு பணத்தை சம்பாதிக்க முடிகிறது. நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. என்னுடைய நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் பல இளைஞர்கள் பகுதிநேரமாக பணிபுரிகின்றனர். வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் எங்களது நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் இருந்தால் அவர்கள் வழியாக மாடித்தோட்டம் அமைத்து கொடுத்துவிடுவேன். அவர்களும் இயற்கை விவசாயம் பற்றியும் தெரிந்துகொள்கின்றனர்.
இந்தத் துறையில் நான் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படுவதற்கு திரு. நம்மாழ்வார் ஐயா அவர்களும், திரு. நெல் ஜெயராமன் அவர்களும் முக்கிய காரணமானவர்கள். கரூரில் உள்ள வானகம் என்ற அமைப்பின் வழியாக நான் இயற்கை விவசாயம் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன். என்னுடைய மதிப்பிற்குரிய முசிறி யோகநாதன் அவர்கள் தான் என்னுடைய முதன்மை வழிகாட்டுநர் ஆவார்.
சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 85 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் உட்கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் 30 கிராம் பழங்களையும், 120 கிராம் காய்கறிகளையும் மட்டுமே உட்கொள்கிறோம். எனவே, மாடித்தோட்டம் தான் இதற்கு தீர்வளிக்கும் என்கிறார் திரு. கமலக்கண்ணன் (8110037898).
- ரவி. தினேஷ்குமார் (7708172315)