சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ஜவுளி உற்பத்தித் துறை!

டெக்ஸ் என்ற ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் திரு.பன்னீர்செல்வம் அவர்களிடம் பேட்டி கண்டோம். திரு. பன்னீர் செல்வம் அவர்கள் தெரிவித்ததிலிருந்து...


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வனவாசி என்ற எனது சொந்த ஊரில் தான் என்னுடைய ஜவுளி உற்பத்தி நிறுவனமான டெக்ஸ் (TEX Cotton & silk sarees manufacturer) உள்ளது.  நான் இந்த தொழிலுக்கு வந்து 12-வருடங்கள் ஆகிறது. ஒன்பது வருடங்கள் மற்றொரு ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக நானே சொந்தமாக மூன்று விசைத்தறிகள் வாங்கிவிட்டேன். எங்களுடைய டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக பல்வேறு விதமான ஜவுளிகளை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.



சொந்தத் தொழில் என்பதால் நாம் எந்த அளவிற்கு நம்முடைய உழைப்பைத் தருகின்றோம் என்பதைப் பொறுத்து நம்முடைய வெற்றி தீர்மானிக்கப்படும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப உழைத்துக் கொண்டிருக்கிறேன். மனதுக்குப் பிடித்தமான தொழில் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


 


தற்போது புடவைகளை உற்பத்தி செய்துகொடுத்துக் கொண்டிருக்கிறோம். சான்றாக, கோரா புடவைகள் (Cora Sarees), காட்டன் புடவைகள் (Cotton Sarees), பாலிஸ்டர் புடவைகள் (Polyester Sarees), சில்க் புடவைகள் (Silk Sarees) போன்ற ரகங்களை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.  இதில் சில்க் புடவைகள் தான் அதிக அளவில் ஆர்டர் செய்கிறார்கள்.


 


கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இப்போது பல பெரிய நிறுவனங்கள் எங்கள் பகுதியில் வேலைவாய்ப்பினை அளித்துக் கொண்டிருக்கின்றன.



ஜவுளி தயாரிக்க அடிப்படை செயல்முறைகளாக பட்டுக் கூடிலிருந்து நூல் எடுத்தல், பாவு தயாரித்தல், டையிங் செய்தல், கலரிங் சேர்த்தல், ரோல் சுற்றுதல், ஊடை சுற்றுதல், விசைத்தறியில் நெய்தல் போன்ற வேலைகள் இருக்கும். இந்த செயல்முறைகளைச் செய்வதற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவர் வேலை செய்வார்கள்.  விசைத்தறி பழுது பார்ப்பவரின் வேலையும் இன்றியமையாததாகும்.  புடவை உற்பத்திக்குத் தேவையான ஜரிகை கட்டையை குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து தான் வாங்குகிறோம்.



பெரிய நிறுவனங்கள் எங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தையும் அவர்களே வாங்கிக் கொடுத்து எங்களை உற்பத்தி செய்து கொடுத்தால் மட்டும் போதும் என்பார்கள் அந்த நேரங்களில் நாங்கள் உற்பத்தி செய்வதற்கான கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொள்வோம்.


என்னுடைய முன்னோர்கள் செய்து வந்த மண்பாண்டங்கள் உற்பத்திச் செய்யும் தொழிலில் லாபம் பெரிதாக இல்லாத காரணத்தினால் நான் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன்.


எங்களுடைய ஜவுளி உற்பத்தித் துறைக்கு மின்சாரம் அத்தியாவசியத் தேவையாகும். தமிழக அரசு எங்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. இந்த நேரத்தில் எங்களுடைய நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.


சாதாரண தறி, டிராப்பாக்ஸ் தறி, அண்டர் பிக் தறி, பிக் அன்ட் பீக் தறி, ஏர் லூம்ஸ் தறி என பல்வேறு விதமான ஜவுளி உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் ஏர் லூம்ஸ் என்கிற சீன இயந்திரம் தான் இப்போது அதிகரித்து வருகிறது.


ஒரு லட்சம் ரூபாய் முதலீடு இருந்தால் தரமான 40 புடைவைகளைத் தயாரிக்க முடியும். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை நம்முடைய முதலீடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவு அதிக லாபம் பெற முடியும். நம்முடைய விற்பனைத் தொடர்புகள் நன்றாக இருக்க வேண்டும். ஜவுளி உற்பத்தியானது ஒரு குறுந்தொழிலாகவும் நாம் செய்ய முடியும்.


 


இது ஒரு லாபகரமான தொழில் ஆகும். இந்த தொழிலைக் கற்றுக் கொள்ள குறைந்தது ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும். இதன் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள மேலும் ஒரு வருடம் ஆகும்.


எதிர்காலத்தில் எங்களுடைய நிறுவனத்தை பெரிய அளவில் வளர்க்க வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக உள்ளது என்கிறார் திரு. பன்னீர் செல்வம் (8778180949).


- ரவி. தினேஷ்குமார்