மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை மனிதவள மேம்பாட்டுத் துறையில் பட்டம் பெற்றுள்ள திரு.அப்துல் ரஹ்மான் கண்டுபிடித்துள்ள புதுமை விளையாட்டுத்தான் 'அஷ்ஷீட் (Asude).' இந்த விளையாட்டானது மன அழுத்தத்தைக் குறைப்பதாக இருக்கிறது.
இந்த விளையாட்டைப் பற்றி அவரிடம் கேட்டோம். அவர் தெரிவித்ததிலிருந்து, 2008-ஆம் ஆண்டுதான் இந்த 'அஷ்ஷீட்' விளையாட்டைக் கண்டுபிடித்தேன். நாம் இவ்வுலகில் சந்திக்கும் அன்றாட சிக்கல்களை மையமாகக் கொண்டு இந்த விளையாட்டானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விளையாடும் நபர்களுக்கு தலா 8 காய்கள் வழங்கப்படும். இந்த காய்களைக் தங்களது முனையிலிருந்து விரும்பிய இடத்தில் வைத்து நகர்த்தி முன்னேறிச் செல்ல வேண்டும். அதேநேரம் எதிர்ப்புறம் அமர்ந்திருக்கும் நபர் நமது காய்களைத் தடுக்கும் விதத்தில் அவரது நகர்வுகள் இருக்கும். விளையாடும் நபர்களுக்கு ஏற்ப இந்த விளையாட்டின் தன்மை மாறுபடும். உலக வரைபடத்தில்தான் இந்த விளையாட்டின் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டின் நோக்கமானது இயற்கை சார்ந்த அறிவை விளையாட்டின் மூலமாக எடுத்துரைப்பதுதான். ஒருவர் இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி எதிர்முனைக்குச் செல்லும்போது வெற்றி பெறுபவர் ஆகிறார். ஒவ்வொரு நகர்வுக்கும் ஒரு சமூகக் கருத்தைக் வைத்துள்ளேன். சான்றாக, விளையாடும் நபர்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, புவி வெப்பமயமாதல், காடுகளை அழித்தல் போன்ற சமூக விழிப்புணர்வையும் இந்த விளையாட்டின் வழியாக ஏற்படுத்த முடியும்.
தொடக்கத்தில் சில பள்ளிகளில் இந்த விளையாட்டைக் கற்றுக் கொடுத்தேன். மாணவர்களிடம் நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் செல்போனில் மூழ்கியிருக்கும் நேரம் குறைந்திருப்பதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். தற்போது கரோனா தடை உத்தரவு காரணமாக மதுரையில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றவர்கள், வெளியூரைச் சேர்ந்த நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உள்ள மன அழுத்ததத்தைக் குறைக்க இந்த விளையாட்டைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் கடந்த நான்கு நாட்களாக பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இந்த விளையாட்டைக் கற்றுக் கொடுத்தேன். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடினார்கள். மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு நேரடியாகவும், வெளி மாவட்ட நிறுவனங்களுக்கும் பள்ளிகளுக்கும் முன்பதிவின் அடிப்படையிலும் இந்த விளையாட்டுக்கான பயிற்சிகளை நடத்தி வருகிறேன். இந்த கொரோனா காலத்தில் பலருக்கு செல்போன் வாயிலாகவும் கற்றுத்தந்து கொண்டிருக்கிறேன்.
இதுதவிர, மதுரையில் உள்ள டிவிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கும், எவர்கிரீன் வித்யாலயா, அஷ்வதா, கேவிபி, முத்துப்பட்டி அரசு பள்ளி, சுப்பிரமணிய புரத்திலுள்ள கம்பர் பள்ளி போன்ற இடங்களிலும் என்னுடைய விளையாட்டுக்கான பயிற்சியை அளித்து வருகிறேன். இந்த விளையாட்டைச் சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ந்து அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். இந்த விளையாட்டுக்குக் காப்புரிமை பெற்றுள்ளேன். இந்த விளையாட்டைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன், அதற்கு இந்தச் சமூகம் முழு ஒத்துழைப்பை தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிக்கிறேன் என்றார் திரு. அப்துல் ரஹ்மான் (8220089835).
- ரவி. தினேஷ்குமார்