இன்ஜினியரிங் முடித்தவுடன் தனது தந்தை செய்துவந்த டெம்போ டிராவல்லர் வாகனம் வாடகைக்கு விடும் தொழிலை தன்னுடைய தொழிலாக ஏற்றுக் கொண்டு அந்தத் துறையில் வளர்ந்துவரும் திரு. என்.எஸ். வினோத்குமார் அவர்களைபேட்டி கண்டோம். அவரிடம் பேசியதிலிருந்து...
சென்னையில் உள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, எனது தந்தை செய்துவந்த டெம்போ டிராவல்லர் வாடகைக்குக் கொடுக்கும் தொழிலைச் செய்ய தொடங்கினேன். எனக்கும் மிகவும் பிடித்திருந்ததால் இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தேன். இந்த தொழிலை எனது அப்பா திரு. ஆர். நடராஜன் அவர்கள் வி. ஆர். டிராவல்ஸ் (V.R. Travels) என்ற பெயரில் 10 வருடங்களுக்கு முன்பாகத் தொடங்கினார். படித்துக் கொண்டிருக்கும் போதே அப்பாவுக்கு தொழில் சார்ந்த உதவிகளைச் செய்து கொண்டிருந்தேன். எனவே, இந்தத் தொழிலை நடத்துவதற்கான அனுபவம் இயல்பாகவே என்னிடம் இருந்தது. எனது அப்பா இந்தத் தொழிலை தொடங்கும் போது எங்களிடம் இரண்டு டெம்போ டிராவல்லர் வாகனங்கள் மட்டுமே இருந்தன. இப்போது எங்களிடம் 10 டெம்போ டிராவல்லர்கள் உள்ளன. அதுதவிர, 2 கார்களும் உள்ளன. எங்களுடைய அலுவலகம் சென்னை கே.கே. நகர். சிவன் பார்க் எதிரில் அமைந்துள்ளது.
எங்களிடம் 10 வாகன ஓட்டுனர்கள் தற்போது வேலை பார்க்கின்றனர். இந்தத் துறையில் வாகன ஓட்டுனர்கள் கிடைப்பது சற்றுச் சிரமமாக இருக்கிறது. நான் இந்தத் தொழிலுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. 12 இருக்கைகள், 14 இருக்கைகள், 18 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் என 6 மாதத்துக்கு ஒரு புதிய வாகனத்தை வாங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போதைய காலகட்டத்தில் வண்டி புதியதாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் நம்முடைய வாகனத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டேன். வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏ.சி வாகனத்தைத்தான் விரும்புகின்றனர். அவர்கள் எங்கள் நிறுவனத்தை தொலைபேசியின் மூலமாக அணுகும் போதே நாங்கள் அவர்களுடைய தேவை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வாகனத்துக்கான கட்டணத்தைத் தெரியப்படுத்துவோம். அதுமட்டுமின்றி, அவர்களுடைய வாட்ஸ்ஆப்பிற்கு வாகனத்தின் படத்தையும், வாகனத்தின் எண்ணையும் அனுப்பிவிடுவோம். வாடிக்ககையாளர்களுக்கு என்றைக்கு வாகனம் தேவைப்படுகிறதோ அதற்கு முன்பாகவே வாகன ஓட்டுனரின் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளருக்கு அனுப்பிவிடுவோம். தமிழகம் முழுவதும் எங்களுடைய சேவை உள்ளது. சபரிமலை சீசன் நேரத்தில் கேரளாவுக்கும் செல்கிறோம்.
நான் முதலில் எனது அப்பாவிடம் 2 லட்சம் ரூபாய் முதலீடாக பெற்றுக் கொண்டு ஒரு டெம்போ டிராவல்லரை வங்கிக்கடன் வழியாக வாங்கினேன். இப்போது வரை 10 வாகனங்களை வாங்கிவிட்டேன். பழைய வாகனங்களை மாற்றிவிட்டேன். இந்தத் தொழிலில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. தொழில் முனைவோராக விரும்புவர்கள் தாராளமாக இந்தத் துறையை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இங்கேயும் சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும். சான்றாக, எப்.சி (Vehicle Fitness Certificate) எனப்படும் வாகனங்களுக்கான தரச் சான்றிதழ் கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் விலை உயர்வு போன்றவை. முன்பு 10 லட்சம் இருந்தால் ஒரு வாகனத்தை வாங்கிவிட முடியும். தற்போது அதே வாகனம் 19 லட்சம் வரை விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்தத் துறையில் சம்பாதித்துவிட முடியும் என்பதால் நான் வாங்கிவிடுகிறேன்.
ஓலா (OLA), உபேர் (UBER) போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு சிறிய அளவிலான வாடகை எங்களுக்குக் கிடைப்பதில்லை. 15 நபர்கள் இருந்தாலும் 3 கார்களில் சென்றுவிடுகின்றனர். மேலும், இப்போது வாகன ஓட்டுனர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அப்படியே அவர்கள் கிடைத்தாலும் நீண்ட நாட்களுக்கு இருப்பதில்லை. சில நேரங்களில் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதும் உண்டு. அந்த நேரத்தில் தளர்ந்துவிடாமல் சமாளிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை என்னிடம் உண்டு.
எங்களுடைய வண்டியின் பராமரிப்பு மற்றும் சேவை நன்றாக இருப்பதாக பல வாடிக்கையாளர்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள். தொடக்கத்தில் ஜஸ்ட் டயல் (Just Dial) மூலமாகப் பல்வேறு விதமான வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. பழைய வாடிக்ககையாளர்களே புதிய வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இப்போது எங்களிடம் நேரடியாக 1000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை 100% காப்பாற்றிக் கொள்கிறோம். சென்னை அயனாவரத்தில் இயங்கிவரும் டெம்போ டிராவல்லர்ஸ் அசோசியன் நிர்ணயிக்கும் கட்டணத்தைத்தான் எங்களுடைய வாகனத்துக்கான கட்டணமாகப் பெறுகிறோம்.
டெல்லியில் உள்ள சில டிராவல்ஸ் நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அதனால் எங்களுக்கு வெளி மாநில வாடிக்கையாளர்களும் கிடைக்கின்றனர். தமிழ்நாட்டினர் டெல்லி சென்றால் அவர்களுக்கான சுற்றுலாவையும் செய்து தர தொடங்கியுள்ளோம். வெளிநாடுகளுக்கு எங்களுடைய நிறுவனத்தின் வழியாக வாடிக்கையாளர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். என்றார் திரு. என்.எஸ். வினோத்குமார் அவர்கள் (96001 48039).
- ரவி. தினேஷ்குமார்